மக்கள் போராட்டங்களை அலட்சியம் செய்யாதீர்கள் – அரசுக்கு திலித் ஜயவீர


 அரசாங்கம் கூறுவது போல எதிர்க்கட்சி பலவீனமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் இருந்து எழும் போராட்டங்களை அரசாங்கம் சாதாரணமாக எடைபோடக் கூடாது விவசாயிகளையும் நாட்டின் சட்டக் கட்டமைப்பில் உள்ள நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளையும் பகைத்துக்கொண்டு இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் விவசாயத் துறைக்கு தர்க்கரீதியான மற்றும் விஞ்ஞானபூர்வமான புதிய அணுகுமுறை அவசியமாகும். தற்பொழுது பயிர் உற்பத்திக்கான உள்ளீடுகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டமே ஏற்படுகின்றது. இதனால் அவர்கள் என்ன செய்வதென்று அறியாது திகைத்துப் போயுள்ளனர்.

இப்போது நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால் அரசாங்கம் வழமை போல் எதிர்க்கட்சியினர்தான் இவற்றைத் தூண்டிவிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றது. உண்மையில் தற்போதைய எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாகவே உள்ளது. அந்தப் பலவீனம் எனக்கும் பொருந்தும்.

ஆனால், எதிர்க்கட்சி பலவீனமாக இருக்கும் ஒரு சூழ்நிலையிலும் கூட, இவ்வளவு பெரிய மக்கள் எதிர்ப்பு அடிமட்ட மக்களிடமிருந்து எழுவதை அரசாங்கம் சாதாரணமாக எடைபோடக் கூடாது. எனவே, இந்த விவசாயிகள் படும் வேதனையை வெறுமனே எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தாமல், இதன் பின்னாலுள்ள யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 130 இலட்சம் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த விவசாயத் துறையை நம்பியே வாழ்கிறார்கள். இவர்களைப் பகைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எந்தவொரு பயணமும் இருக்க முடியாது. மறுபுறம் எமது சட்டக் கட்டமைப்பில் உள்ள நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளையும் அரசாங்கம் பகைத்துக் கொண்டுள்ளது. அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களில் உலா வரும் அறிக்கையின் மூலம் சட்டத்தரணிகளின் கட்டணங்களைக் கண்காணிப்புக்கு உட்படுத்த அரசாங்கம் முயல்கின்றது. இது உலகிலேயே கேள்விப்படாத ஒன்றாகும்.

மருத்துவர்களைப் போல் தமக்குத் தேவையான சட்டத்தரணிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்தச் சட்டத்தரணிகளை முற்றாகப் பகைத்துக்கொண்டு அரசாங்கம் எத்தகைய கொள்கையின் கீழ் செயற்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை.

நீதித்துறையின் முன்னேற்றத்துக்காக அது விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கு உடன்பாடு உண்டு. ஆனால், அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, குறிப்பிட்ட ஒரு சில நீதிபதிகளைத் தொடர்ந்து பதவியில் தக்கவைத்துக் கொள்ளவே இத்தகைய முன்மொழிவைக் கொண்டுவருகிறது என்பதில் தான் எமக்கு எதிர்ப்புள்ளது. இதனால் நீதித்துறை மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டு, மக்கள் தங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள மாற்று வழிகளைத் தேடுவார்கள். அது சமுதாயத்துக்கு மிகப்பெரியதொரு வீழ்ச்சியைத் தேடித்தரும் என்றார்.