
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் துறைமுக அதிகாரசபையின்கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகப் புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் லாஜிஸ்டிக் பார்க் (Logistic Park), தெற்கு துறைமுக அலைதாங்கியை நீடித்தல், மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த நிருவாகத்தையும் டிஜிட்டல் மயமாக்கல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்திறனை அதிகரிக்கும் 30 வருட மாஸ்டர் பிளான் குறித்தும் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். இதன்படி, வரும் 2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 2027ஆம் ஆண்டிற்குள் விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியின்கீழ் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களை விரிவுபடுத்தல், புதிய முனையம் அமைத்தல் மற்றும் டிப்போ விரிவாக்கப் பணிகளை நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.






.jpg)






