நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்பு , மனசாட்சிக்கு இணங்க நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் – சஜித் பிரேமதாச
அரசாங்கத்தின் இயலாமையும் பொறுப்பற்ற செயற்பாடுமே நீர்கொழும்பு சிறைச்சாலைை சம்வத்துக்கு காரணமாகும். அதனால் மனசாட்சிக்கு இணங்க, நீதி அமைச்சருக்கு தொடர்ந்தும் அந்த பதவியில் இருக்க முடியாது. அதேநேரம் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி முற்றாக ஜனநாயக விராேத செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிிகள் அரசாங்கத்தின் பொறுப்பிலே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தொடர்பான பொறுப்பு அரசாங்கத்துக்கே இருப்பதாக அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அதேபோன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திலும், சிறைச்சாலைகளின் தரத்தை சர்வதேச தரத்துக்கு கொண்டுவருவதாகவும், கைதிகளை மனிதாபிமானத்துடன் செயற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் ஆகின்றபோதும் சிறைச்சாலைகளை தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறி இருக்கிறது.தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்துக்கு யார் பொறுப்பு என கேட்கிறோம். எம்மை பொறுத்தவரை விடயத்துக்கு பொறுப்பான நீதி அமைச்சருக்கு மனசாட்சிக்கு இனங்க, தொடர்ந்தும் இந்த அமைச்சுப்பதவியை வகிக்க தகுதியில்லை. அரசாங்கத்தின் இயலாமையும் பொறுப்பற்ற நடவடிக்கையாலுமே நீர்கொழும்பு சம்பவத்தை தடுக்க முடியாமல் போயிருக்கிறது.
அதேநேரம் இந்த நீதி அமைச்சரின் காலத்தில் நீதிமன்ற சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நீதியரசர்களை நியமிக்காமல் இருக்கிறார். மாறாக இந்த நீதிமன்றங்களின் நீதியரசர்களின் வயதெல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது, இந்த நீதிமன்றங்களுக்கு நியமிப்பதற்கு தகுதியான நீதியரசர்கள் இல்லை என்பதாலா என கேட்கிறோம். நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முயற்சி முற்றாக ஜனநாயக விராேத செயலாகும். நீதிமன்ற சுயாதீன தன்மையை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகும். நீதிமன்றம் தொடர்பில் மக்களின் நம்பிக்கையை இல்லாமல் செய்யும் செயலாகும்.
அத்துடன் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு சட்டத்தரணிகள் சங்கம், மேல் நீதிமன்ற நிதிபதிகளின் சங்கம் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளின் சங்கங்களும் அவர்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். நீதிச் சேவை சங்கம் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிராக நடத்திய வாக்கெடுப்பில் 65க்கு பூச்சியம் என்ற பெறுபேறே கிடைத்திருக்கிறது. ஒருவர்கூட இதற்கு ஆதரவளிக்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் தற்போது நீதிபதிகளை வேட்டையாட பின்னால் துரத்தி வருகிறது. எனவே அரசாங்கம் நீதிமன்ற தன்மையை கைப்பற்றிக்கொள்ளவே முயற்சிக்கிறது. அதனை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.










.jpg)
.jpg)


