
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிவேக நெடுஞ்சாலையில் 100 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 11 திருட்டுகளின் பெறுமதி 580 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஏனைய 89 திருட்டுகளின் பெறுமதி கண்டறியப்படவில்லை என கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
நெடுஞ்சாலையின் மின் கேபிள் அமைப்பை வடிவமைக்கும் போது, நடுப்பகுதியில் இடப்பட்டிருந்த மின் கேபிள்கள் முழுமையான கொன்கிரீட் பாதுகாப்பு இன்றி, சுமார் 3 அடி அரைவட்ட விட்டம் கொண்ட ஹியூம் குழாய்கள் மூலம் பகுதி அளவிலேயே மூடப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மின் கேபிள்களை மிக இலகுவாக வெட்டி அகற்றக்கூடிய நிலை காணப்பட்டதாக கள ஆய்வின் போது அவதானிக்கப்பட்டுள்ளது.
முதல் திருட்டு பதிவான 2021 ஆம் ஆண்டு முதல் பொருத்தமான பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்தப்படாதமை மற்றும் பொறுப்பு வாய்ந்த மேற்பார்வை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்காதமை காரணமாக திருட்டுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 10 கிலோமீட்டருக்கு செய்யப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், முழுமையான வீதியின் சேதங்களை நிவர்த்தி செய்ய செலவாகும் தொகை 1,770 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் திருட்டுகள் மற்றும் சேதங்களுக்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் கண்டு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை மேலும் வெளிப்படுத்துகிறது.





.jpg)

.jpg)


.jpg)
.jpg)
