16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் 19 வயது இளைஞர் அட்டனில் கைது



அட்டன் பகுதியில் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் 19 வயதான சந்தேகநபர் ஒருவரை அட்டன் பிரதேச குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

அட்டன் - வட்டவளை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக அட்டன் நகருக்கு வருகை தருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 200 யூரோ பெறுமதியான 9 போலிப் பணத்தாள்களும், 100 யூரோ பெறுமதியான 7 போலிப் பணத்தாள்களும் என மொத்தம் 16 போலி வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பைச் சேர்ந்த தனது மைத்துனரே இந்த வெளிநாட்டுப் பணத்தாள்களைத் தன்னிடம் தந்ததாகவும், அவை போலி நாணயத்தாள்கள் என்பது தனக்குத் தெரியாது எனவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு நடவடிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அட்டன் பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.