‘சிரிலிய சவிய’ நிதி விசாரணை: ஷிரந்தி ராஜபக்ஷவை செப்டம்பர் 24இல் ஆஜராக அழைப்பாணை


கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு சிரி ஸ்கேனர் இயந்திர கொள்வனவுக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட ஒரு மில்லியன் ரூபா நிதியை, ‘சிரிலிய சவிய’ அறக்கட்டளையினால் பராமரிக்கப்பட்டு வந்த வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டமை தொடர்பில் முன்னெடுத்துவரும் விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துனைவியார் ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 24ஆம் திகதி முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பானை விடுத்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக இன்றைய தினம் (16) நாட்டிலிருந்து வெளியேற தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஷிரந்தி ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள், நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாவதற்கான எழுத்து மூல அறிவிப்பைக் கையளித்திருந்தனர்.

சிங்கப்பூருக்கு பயணிக்க முற்பட்டபோதே, இன்று விமான நிலையத்தில் வைத்து அவரிடம் இந்த அறிவித்தல் கையளிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 109(6)ஆம் அத்தியாயத்தின் கீழ் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தலுக்கு அமைய, எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

109(6)ஆம் அத்தியாயத்துக்கமைய, குற்றச்செயல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அல்லது விசாரணை அதிகாரி, அக்குற்றச்செயல் தொடர்பான விடயங்கள் மற்றும் சூழ்நிலையை குறித்து அறிந்திருப்பார் எனக் கருதப்படும் நபரை தன் முன் ஆஜராகுமாறு எழுத்து மூலம் அறிவிக்க முடியும். குறித்த உத்தரவுக்கமைய சம்பந்தப்பட்ட நபரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

அதற்கமைய 'சிரிலிய சவிய' அமைப்புக்கு தனியார் வங்கியொன்றினால் வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு ஸ்கேன் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதி பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

'சிரிலிய சவிய' அமைப்பினால் விடுக்கப்பட்ட எழுத்து மூலக் கோரிக்கைக்கு அமையவே தனியார் வங்கி இந்த 10 மில்லியன் ரூபா பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வங்கியில் குறித்த காலப்பகுதியில் கடமையாற்றிய அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடம் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரமானது சீனா அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, தனியார் வங்கியிடம் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய குறித்த நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக தனியார் வங்கியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை, 'சிரிலிய சவிய' கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்ட விதம் மற்றும் அதன் பின்னர் அந்நிதி பயன்படுத்தப்பட்ட முறைமை குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விசாரணைகளுக்கு அமைவாக, கடந்த 2026 பெப்ரவரி 3ஆம் திகதியும் ஷிரந்தி ராஜபக்ஷ நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இதன்போது அவரிடம் 4 மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

மேற்படி சம்பவம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் மேலதிக வாக்குமூலத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தனக்கு உடலநலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தமையினால் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி அவரிடம் வாக்குமூலத்தைப் பெற முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.