எரிபொருள் விலை அதிகரிப்பை ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் மீது சுமத்தபோவதில்லை , எரிபொருள் நிவாரணத்துக்கு ரூ.4,100 கோடி ஒதுக்கீடு - ஜனாதிபதி



உலக சந்தையில் எரிபொருள் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகின்ற நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பை ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் மீது சுமத்தபோவதில்லை. எரிபொருள் நிவாரணத்துக்காக எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்கு 4100 கோடி ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார முன்னேற்றத்தின் உச்சபயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குவேன். 5000 ரூபா பகிர்ந்தளித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கலாசாரத்தை நாங்கள் தொடரபோவதில்லை. பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திகள் ஊடாகவே மக்களுக்கு நிலையான நிவாரணங்களை வழங்குவேன்.

பூகோள பாதக காரணிகளால் உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையற்றதாகவே காணப்படுகிறது. கடந்த 06 மாத காலமாக எரிபொருள் விலையில் திறைசேரி ஊடாக நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. எரிபொருளின் நிர்ணய தொகையில் ஒருபகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இதற்கமைய உலக சந்தையில் எரிபொருளின் விலை மீண்டும் உயர்வடையும் சாத்தியம் காணப்படுகின்ற நிலையில் அதன் ஒட்டுமொத்த சுமையையும் மக்கள் மீது சுமத்த போவதில்லை.

எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசெம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்குரிய எரிபொருள் நிவாரணத்துக்காக 4100 கோடி ரூபா ஒதுக்கப்படும்.இதற்கான அமைச்சரவை பத்திரம் திங்கட்கிழமை (28) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.