ரூ. 41 இலட்சம் அரசுக்கு இழப்பு – முன்னாள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் கைது



மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஓபத்த விதானகே பிரசன்ன சஞ்சீவ இலஞ்சம் அல்லது ஊழல்  புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பதவியில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை சட்டத்தின் விதிமுறைகளை மீறி, வழக்கமான கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேடான நடவடிக்கையால் அரசாங்கத்திற்கு ரூ.4,160,000 (41.6 இலட்சம்) நிதி இழப்பு ஏற்பட்டதுடன், வெளித் தரப்பினருக்கு சட்டவிரோதமான அனுகூலம் வழங்கப்பட்டதாகவும் விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.