
மட்டக்களப்பில் 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (15) காணொளி ஊடாக தெரிவித்தார்.
குறித்த கொலைவழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை ஆஜர்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் ஆஜர்படுத்தினர்.
இதன்போது சிஐடியினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு எதிராக சமர்ப்பணம் முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து பிள்ளையான் சார்பாக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரநாயகம் பிள்ளையானுக்கு சிறையில் வழங்கும் உணவு தொடர்பாகவும் அவரது தாயார் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு கடந்த வழக்கு விசாரணையின்போது அனுமதி கோரியது தொடர்பாக வாதங்களை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து நீதவான் சிறைச்சாலை அதிகாரியை அழைத்து பிள்ளையானின் உணவு மற்றும் தாயுடன் தொலைபேசியில் உரையாடுவது தொடர்பான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 22ம் திகதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டதுடன் பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸ் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்தார்.
அதேவேளை லண்டனில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் பாயிஸ் என்பவரை கைது செய்வதற்கான கடிதம் ஒன்றை சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பியுள்ளதாக சிஐடியினர் தெரிவித்தனர்.










.jpg)
.jpeg)
