500 Body-Worn Cameras கொள்வனவு தொடர்பில் பொலிஸ் விளக்கம்



Body Worn Camera-களை கொள்வனவு செய்வதற்கான தற்போதைய கேள்விப்பத்திர நடைமுறையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது.

ஜன அரகலய வியாபாரய அமைப்பாளர் வசந்த முதலிகே முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், இது தொடர்பில் பொலிஸ் விநியோகப் பிரிவின் பணிப்பாளரிடம் அறிக்கை கோரப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் தற்போதைய தேவைக்காக 500 Body Worn Cameras மற்றும் 70 Docking Stations கொள்வனவு செய்ய, பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்ட குழு ஏகமனதாக பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச கொள்வனவு வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைய வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

எந்தவொரு நிறுவனத்திற்கும் சாதகமாக காலக்கெடுகள் மாற்றப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் பொலிஸ் மறுத்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்னும் இடம்பெற்று வருவதால் இதுவரை எந்த நிறுவனமும் தெரிவு செய்யப்படவில்லை; ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது.