துப்பாக்கிச் சூடுகள் சமூக சீரழிவின் வெளிப்பாடு – சஜித் பிரேமதாச



நேற்றைய தினமும் பத்தேகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இது சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினை மாத்திரமன்றி, சமூகத்தில் ஏற்படும் சீரழிவாகவும் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. நாட்டில் மனிதர்களை கொல்வதை விடுத்து, மனிதனை வாழ வைக்கும் நடவடிக்கைகளே நடக்க வேண்டும். பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் எழும் போது பேச்சுவார்த்தைகள், கருத்துப் பரிமாற்றங்கள் ஊடாக முன்னேற்றம் கண்டுள்ள முறைமைகளின் ஊடாக சிந்தித்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரத்மலானை கொத்தலாவலபுர ஸ்ரீ விஜித்தாராம விகாரையில் நிர்மாணிக்கப்படும் தங்கவேலித் தாழ்வாரத்துடன் கூடிய போதிப் பிரகாரத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையில் 14,129 விகாரைகளும், 10,347 அறநெறி பாடசாலைகளும், 824 பிரிவெனாக்களும், 327 சாசனாரக்‌ஷ சபைகளும் காணப்படுகின்றன. காட்சிப்படுத்தப்படும் பௌத்தத்தை விடுத்து, நடைமுறை பௌத்தமே தற்சமயம் நாட்டிற்கு அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விகாரை முறைமையை மேம்படுத்தி, சம்புத்த சாசனத்தின் காவல்தெய்வங்களான மூன்று பீடங்களினதும் மகா சங்கரத்தினரைப் பாதுகாத்து, அறநெறி பாடசாலை கட்டமைப்பை மேம்படுத்தி, தர்ம போதனை கல்வியைப் பரவலாக்கி, தர்மத்தால் நிரப்பப்பட்ட குடிமக்கள் பரம்பரையை நாகரிகமான, பண்பட்ட, ஒளிமயமான, சிறந்த குடிமக்களாக மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

அத்துடன், சுதந்திர நாட்டில் பண்பட்ட குடிமக்களை உருவாக்குவதற்கு அறநெறிப் பாடசாலைகள் உறுதுணையாக காணப்படுகின்றன.

கிராமத்திலும் நகரத்திலுமுள்ள விகாரைகள் மற்றும் ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு உரித்தான மதத் தலங்களும் பண்பட்ட குடிமக்களை உருவாக்குவதற்கு உறுதுணையாக காணப்படுவதனால் இந்த மதத் தலங்களைப் பலப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.