திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து திருக்கோவிலில் போராட்டம்


(செல்வி வினாயகமூர்த்தி)


அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக, தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு கோரியும் இன்று திங்கட்கிழமை (28) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில், தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு இப்போராட்டம், முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப நாளான கடந்த 15ஆம் திகதி, தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள நினைவிடப் பகுதியில் சிலை நிறுவப்பட்டிருந்தது. தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், கடந்த சனிக்கிழமை (26) இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதனையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் இரண்டு பொலிஸ் வாகனங்களில் வருகை தந்து, குறித்த சிலையை அங்கிருந்து அகற்றிச் சென்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அதனை மீண்டும் உரிய இடத்தில் நிறுவுமாறு கோரியும் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி,

“தியாகி திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

தியாகி திலீபன் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது உயிரைத் தியாகம் செய்தவர். அவரது சிலை அகற்றப்பட்டமை எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. எனவே, சிலை நிறுவப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அதனை நிறுவ வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

பல வருடங்களாக எமது உறவுகளைத் தேடி போராடி வருகின்றோம். எமது போராட்டங்களுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தியாகி திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலையும் அகற்றப்பட்டிருப்பது எமது மனங்களை மேலும் பாதித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடையவர்களின் நினைவாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தியாகி திலீபனின் சிலையையும் மீண்டும் உரிய இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது உறவுகளுக்கான நீதியையும், சிலையை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், தியாகி திலீபனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.