யானைத் தந்தம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பாகங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களுடன் இருவர் கைது





மாத்தறையில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புகளில், யானைத் தந்தம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பாகங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 21ஆம் திகதி மாத்தறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பதக்கம் ஒன்றை விற்பனை செய்யத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் பனஹடுவ வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நீண்டகால விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட யானைத் தந்தப் பதக்கத்துடன் சந்தேகநபர் மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவருக்கு 70,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அதே தினம் திஹகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில், யானைத் தந்த வளையல், யானைத் தந்தப் பதக்கம், சிறுத்தைப் பல் பொருத்தப்பட்ட பதக்கம் மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தாயத்து என்பன மற்றொரு சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சந்தேகநபரும் மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கு மீண்டும் நவம்பர் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பாகங்களை வைத்திருத்தல், காட்சிப்படுத்தல், எடுத்துச் செல்லல் மற்றும் விற்பனை செய்தல் என்பன சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத வனவிலங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் தகவல் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.