விமல், கம்மன்பில, திலித்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு – மூவரடங்கிய நீதியரசர் குழாம் நியமனம்



முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட அறுவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டைப் பரிசீலிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் மூவரடங்கிய நீதியரசர் குழாமை நியமித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தது.

இந்த விவகாரம் திங்கட்கிழமை (14) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முறைப்பாட்டைப் பரிசீலிப்பதற்காக மூவரடங்கிய நீதியரசர் குழாம் நியமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் விரிவுரையாளர் மஹிந்த பத்திரண ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னதாகத் தீர்மானித்திருந்தார்.

இதனையடுத்து, உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், தனக்கு எதிரான கோட்டை நீதவானின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தி திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை செப்டெம்பர் 18ஆம் திகதி எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.