பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம் – பவுசர் உரிமையாளர்கள் எச்சரிக்கை



எரிபொருள் போக்குவரத்துக்கான விலை நிர்ணய சூத்திரம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும் என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுடன் தொடர்புடைய இரண்டு சங்கங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இன்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து விலை நிர்ணய சூத்திரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விலை நிர்ணய சூத்திரத்தை திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும், 2025 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அதனைத் திருத்தி, 2026 ஜனவரி முதல் புதிய முறையை நடைமுறைப்படுத்த முன்னதாக இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆண்டில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதிலும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை, உதிரிப்பாகங்களின் விலை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக தங்களது இயக்கச் செலவுகள் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பவுசர் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிப் பேச்சுவார்த்தையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் இணைந்து எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.