அநுராதபுர பேரணியில் மதுபான சர்ச்சை - மது அருந்துவது அவர்களின் உரிமை; நாங்கள் வாங்கிக் கொடுக்கவில்லை – சாகர காரியவசம்


எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வருமாறு குறிப்பிடும் அதிகாரம் எமக்கு இல்லை. மது அருந்துவது அவர்களின் உரிமை.மது அருந்தி விட்டு கூட்டத்துக்கு வருமாறு நாங்கள் குறிப்பிடவும் இல்லை, வாங்கிக் கொடுக்கவும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அநுராதபுரத்தில் இடம்பெற்ற எமது கட்சியின் கூட்டத்தில் ஏழை விவசாயிகளும், தொழிலாளர்களும் கலந்துக் கொண்டார்கள். அவர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் திரிபுப்படுத்தப்பட்ட வகையில் காணொளிகள் பரிமாற்றப்படுகின்றன.

இலங்கையில் வருடாந்தம் பெருந்தொகையான மதுபானம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றை இலங்கையர்கள் தான் குடிக்கிறார்கள். மதுபானம் அருந்துவதும், அருந்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகும்.

எமது கூட்டத்துக்கு மதுபானம் அருந்தாமல் வரவேண்டாம் என்று நாங்கள் எவரையும் குறிப்பிடவில்லை. மதுபானம் அருந்துவது அவர்களின் உரிமையாகும். அதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை.

கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு நாங்கள் மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை. மதுபானம் அருந்துவதும், அருந்தாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும் என்றார்.