அனோஜனுக்கு கருணை கோரி சவூதி மன்னருக்கு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கடிதம்
சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை மற்றும் பெருந்தொகை அபராதத்தை எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி, இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2026 செப்டம்பர் 21ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அனுஜனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் நிவாரணம் அல்லது குறைப்பு வழங்குவதுடன், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிதி அபராதத்தை குறைக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ பரிசீலிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறும் தொழிலாளியான அனுஜனால் குறித்த அபராதத் தொகையை செலுத்துவது மிகவும் கடினமானது என்றும், இலங்கையில் உள்ள அவரது குடும்பம் அவரது வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாம் தண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுஜன் வருத்தத்தையும் மனவேதனையையும் வெளிப்படுத்தியுள்ளதுடன், மன்னிப்புக் கோரி நபிகள் நாயகம் முஹம்மது மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு தனது மரியாதையையும் தெரிவித்துள்ளதாக அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு முழுமையான மரியாதை அளிப்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை–சவூதி அரேபியா இடையிலான நீண்டகால நட்புறவை கருத்திற்கொண்டு, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.




.jpg)




.jpg)

.jpg)

