கீத் நொயார் கடத்தல் தொடர்பான விபரங்கள் நினைவில் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் சாட்சியம்


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்களோ, அந்தச் சம்பவம் குறித்து யாரேனும் தன்னைத் தொடர்புகொண்டார்களா என்பதோ தற்போது நினைவில் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு சமூக செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் சாட்சியமளித்தார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட பின்னர் லலித் அலஹகோன் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அது எனக்கு நினைவில் இல்லை” என கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்தார்.

கீத் நொயார் தனது தலையீட்டினால் விடுவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட கருத்தையும் அவர் முழுமையாக மறுத்தார். மேலும், தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.