பத்தேகம துப்பாக்கிச் சூடு – மூவர் கைது




பத்தேகம, ஹல்பதொட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த எல்பிட்டிய பிரதேச குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

காரில் வந்த குழுவொன்று ஹல்பதொட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து பத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெதுருவத்த சந்தி மற்றும் ஹல்பதொட்ட பகுதிகளில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 16.170 கிராம் ஹெரோயின் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

22 மற்றும் 33 வயதுகளுக்குட்பட்ட சந்தேகநபர்கள் கஹவத்த, பல்லேபெத்த மற்றும் ஹிக்கடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.