அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஜோசப் ஸ்டாலின்


இலங்கையில் கல்வித்துறையில் முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறதுடன், ஆசிரியர்கள் தங்கள் பதவி உயர்வுகளுக்காக மேலதிக கல்வியை மேற்கொள்ளும் போது ஆசிரியர்களை ஏமாற்றி பணம் அறவிடும் இத்தகைய நிறுவனங்கள் மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தகுதியான மற்றும் முறையான அங்கீகாரம் பெற்ற கல்வி வாய்ப்புகள் அரசாங்கத்தினால் போதுமான அளவில் வழங்கப்படாததால் இத்தகைய நிறுவனங்களை நம்பி ஏமாறுகிறார்கள். ஆசிரியர்கள் தங்கள் பதவி உயர்வுகளுக்காக கல்வி டிப்ளோமா படிப்புகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இத்தகைய போலி நிறுவனங்களில் பயிலும் ஆசிரியர்களின் சான்றிதழ்களைக் கல்வி அமைச்சு ஏற்க மறுப்பதால் அவர்களின் பணம் மற்றும் உழைப்பும் வீணாகிறது.

இதேவேளை, நாட்டில் 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட சுமார் 157 சிறிய பாடசாலைகளை மூடுவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறான சிறிய பாடசாலைகளை பராமரிப்பதும் அவற்றுக்கான ஆசிரியர்களை நியமிப்பதும் வீண் வேலை என்று அரசாங்க தரப்பினர் கருதுகிறார்கள். சிறிய பாடசாலைகளை மூடிவிட்டு அங்கிருக்கும் மாணவர்களைப் பெரிய பாடசாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்று முன்வைக்கும் வாதம் முற்றிலும் தவறானது.

குறிப்பாக, கல்வியானது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதாக அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது. பின்தங்கிய குடும்பத்தின் மாணவர்களிள் கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு பதிலாக அவர்களது அருகிலுள்ள பாடசாலைகளை மூடுவது கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.

மேலும், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் இலக்குகள் இன்னும் நிறைவேறாப்படாத நிலையில் தற்போது முன்னெடுக்கப்படும் இந்த நடவடிவக்கை கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு பதிலாக அதன் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளும் ஒரு தவறான அணுகுமுறையாகும். அத்துடன் பாடசாலைகளை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் தற்போது அரசாங்கத்தின் தான் உள்ளனர். எனவே அவசரப்பட்டு பாடசாலைகளை மூடுவதற்கு பதிலாக கல்வி நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து முறையான கல்விசார் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் இவ்வாறான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.