கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மீட்பு
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 16,803,750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சருமத்தைப் பொலிவாக்கும் முகப்பூச்சுகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைப்பற்றியுள்ளனர்.
டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணியளவில் கொண்டுவரப்பட்ட 6 பயணப் பைகளிலிருந்தே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
6 பயணப் பைகளில் அடைக்கப்பட்டிருந்த 'டொப் கன்' மற்றும் 'பிளாட்டினம் 07' வகையைச் சேர்ந்த 111,400 சிகரெட்டுகளைக் கொண்ட 557 சிகரெட் கார்ட்டூன்களும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 125 முகப்பூச்சுப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 1 கோடி 68 இலட்சத்து 3,750 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முறையான சுங்க விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், குறித்த சிகரெட்டுகள் மற்றும் முகப்பூச்சுத் தொகையை அரசுடமையாக்கியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அவற்றை அழிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளனர்.
இப்பொருட்களைக் கொண்டுவந்து கைவிட்டுச் சென்ற நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.












.jpg)