பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் – பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு


இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் கலந்துரையாடியுள்ளார்.

இது இருவருக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாகும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தனது அதிகாரபூர்வ X பதிவில் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில், இலங்கைக்கு அமெரிக்கா அண்மையில் வழங்கிய பாதுகாப்பு ஆதரவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதில் 10 TH-57 ரக ஹெலிகொப்டர்கள், நான்காவது அமெரிக்க கடலோரக் காவல்படை கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் கடலோர ரோந்து கப்பல்களுக்காக 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மேம்பட்ட செயற்கைக்கோள் தொடர்பாடல் முறைமை ஆகியவை அடங்குகின்றன.

இவ்வசதிகளை மேலும் பயன்படுத்தி இலங்கை பாதுகாப்புப் படைகளின் தயார் நிலையை மேம்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இந்து சமுத்திரம் மற்றும் இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்களை முன்னேற்றுவது தொடர்பிலும் இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள திறன்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.