அனோஜனை பாதுகாக்க அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – ஐரோப்பிய ஒன்றியத்திடம் காவிந்த ஜயவர்தன MP கோரிக்கை



சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரத்தில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக ஆங்கில மற்றும் தமிழ் ஊடக செயலாளரும், அரசியல் தொடர்பாடல் அதிகாரியுமான ஏ.ஜி.நளீர் அஹமட் ஆகியோருக்கும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும்,ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான பேராசிரியர் ஸ்வென் சைமன்,ஐரோப்பிய மக்கள் கட்சியின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு குழுவின் கொள்கை ஆலோசகர் பெஞ்சமின் ஓப்பர்மேன்,ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரால்ப் சீகாட்ஸ்,சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் கொன்ராட்-அடேனவர்-ஸ்டிஃப்டங் அமைப்பின் ஆசிய அரசியல் உரையாடலுக்கான பிராந்திய நிகழ்ச்சித் திட்டத்தின் கொள்கை ஆலோசகரும்,துணைத் தலைவருமான ஜோனாஸ் நிட்ச்கே மற்றும் ஜேர்மன் பன்னாட்டு கொள்கை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஸ்வென் நிக்கோலே ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அவ்வாறே, நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மாகாண சபை தேர்தல் விரைந்து நடத்தப்பட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும்இ மாகாண சபை குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதேசங்களின் பௌதீக அபிவிருத்தியிலும் பிற முன்னேற்றங்களிலும் வகிக்கும் முக்கியத்துவம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இச்சந்திப்பில் எடுத்துரைத்தார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், பாராளுமன்ற ஜனநாயகம், இலங்கையின் தேர்தல் முறை, பாராளுமன்ற கொள்கை வகுப்பாக்க செயற்பாடுகளின் சமகால போக்குகள், அரசியலமைப்பு விவகாரம்,சட்டவாக்க செயற்பாடுகளில் இளம் தலைமுறையினரின் பங்கேற்பு, தெற்காசியாவின் அண்மைய அரசியல் போக்குகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.