கிழக்கு பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகம் ஏற்பாடு செய்திருந்த முதலாவது சர்வதேச மாநாடு கடந்த 14ம், 15ம் திகதிகளில் திருகோணமலை வளாகத்தின் தகவல்தொடர்பாடல் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட கலையரங்கில் முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.இம் மாநாடு முதல் தடவையாக திருமலையில் இடம் பெற்றது முக்கிய அம்சமாகும்.
இவ்வாய்வு மாநாட்டின் தலைமையுரையினை வளாகத்தின் முவல்வர் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தொடக்க உரை துணைவேந்தர் பேராசிரியர். ரி. ஜெயசிங்கம் அவர்களால் ஆற்றப்பட்டது. அதன் பின் ஆய்வு மாநாட்டின் பிரதம விருந்தினர் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் சரத் அபய குணவர்த்தனவினால் நிகழ்தப்பட்டதோடு அதனைத்தொடர்ந்து அதிதி பேச்சாளர்களின் உரை இடம்பெற்றது.
அதிதி பேச்சாளர்களாக மலேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த கணணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பீட பேராசிரியர். ஷாமலா சுப்ரமணியமும் கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ நிதிப்பீட பேராசிரியரும், கொழும்பு மனிதவள முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளருமான, பேராசிரியர். ஜெ .ஏ. எஸ். கே. ஜெயக்கொடி அவர்களும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து முதலாம் நாளுக்கான ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளர்களினால் ஆய்வரங்கில் சமர்பிக்கப்பட்டது. பின்னர் அன்றிரவு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அவ்வரங்கினை அலங்கரித்தன. ஆத்துடன் அன்றைய நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.
ஆய்வுமாநாட்டின் இரண்டாம் நாள் ஆய்வுமாநாட்டின் முக்கிய நாளாக விளங்கியது. காரணம் 2ம் நாள் நிகழ்வில் இடம்பெற்ற அறிவியல் உரையாடல். அறிவியல் உரையாடலின் கருப்பொருளாக (scientific Dialog) நிலைத்திருக்கும் பிராந்திய அபிவிருத்திக்கான சூழல் சவால்கள் எனும் தலைப்பில் நான்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைசார் வல்லுனர்கள், பங்குகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆர். வெங்கடபதி 'மனித வர்க்கத்தின் நீண்ட ஆயுளுக்காய் இயற்கையை பேணுவோம்' எனும் உபதலைப்பிலும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழத்தின் பட்டகற்கைகள் பீடப் பீடாதிபதியுமான ஹேமந்தி ரணசிங்க 'இலங்கையில் நீடித்திருக்கும் அபிவிருத்திக்கான சூழல் சவால்கள்' தொடர்பாகவும், இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி. ஜி. சிவராமன் 'மனித வர்க்கத்தின் சௌகரியம் மற்றும் பேராசை நன்கு சமநிலைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலை ஒருபுறம் சேதப்படுத்தி பூமியை அழித்து மறுபுறம் தொற்றா நோய்கள் பலவற்றுக்கு வழிசமைக்கின்றது' எனும் உபதலைப்பிலும் 'நிலைத்திருக்கும் பிராந்திய அபிவிருத்திக்கான காலநிலை மாற்ற சவால்கள்' எனும் உபதலைப்பில் கலாநிதி. மதிவேந்தன் அவர்களும் உரையாடலை மேற்கொண்டனர். இவ்வறிவியல் உரையாடலை கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். ரி. ஜெயசிங்கம் நெறிப்படுத்தினார்.
அது மட்டுமன்றி முதன்முறையாக மாணவர்களுக்கான ஆய்வுகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இவ்வாய்வரங்கில் வெளிநாட்டு மற்றும் இலங்கை பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் அடங்கலாக 200க்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றியதுடன் 57 ஆய்வுகட்டுரைகள் வாத, பிரதிவாதங்களுடன் சமர்பிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக URF மாணவர்களுக்கும் தங்கள் ஆய்வின் முடிவினை பிரசன்னமாக்குவதற்கும் ஒரு தளமாக இது அமைந்தது. இவ் ஆய்வு மாநாடு திருமலை வளாக விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் குறிப்பாக திருமலை வாழ் சமூக பொருளாதார ஆய்வாளர்களுக்கும் ஒரு அறிவு மையமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தின் பணியான கற்றல், கற்பித்தலுக்கு அப்பால் அறிவை விரிவுபடுத்தும் பணியுடன், நடைமுறைப்பிரைச்சனைக்கான அறிவுசார் தீர்வினையும் வழங்கும் நிறுவனமாக திருமலை வளாகம் அமைந்துள்ளமை சிறந்த அம்சமாகும்.



















































