
நிலக்கரி கப்பல்கள் தாமதமாக வருகை தந்தமையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாமதக்கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை. மாறாக வரலாற்றில் முதன்முறையாக கப்பல் நிறுவனங்களிடமிருந்து சுமார் 5 முதல் 6 இலட்சம் டொலர் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என வலு சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாண்டு பெரும்பாலான கப்பல்கள் முற்பதிவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட தினங்களில் அன்றி, தாமதமாக வருகை தந்தமையால் அவற்றுக்கான தாமதக் கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலைமை எமக்கு ஏற்படவில்லை. அதேபோன்று அவசரக் கொள்வனவுக்காக முற்பதிவு செய்யப்பட்ட கப்பல்களும் தாமதமாகவே வருகை தந்துள்ளன. இதனால் நிலக்கரியை தரையிறக்கும் செயற்பாடுகள் தாமதமடைந்துள்ளன.
எனவே எதிர்வரும் செப்டெம்பர் வரை அக்கப்பல்களுக்கு இலங்கையில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்கும் நாம் தாமதக்கட்டணங்களை செலுத்த தேவையில்லை. குறித்த கப்பல் நிறுவனத்தின் இணக்கப்பாட்டுனேயே அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி தரையிறக்கும் செயற்பாடுகள் தாமதமடைந்துள்ளமையால் அரசாங்கத்துக்கு தாமதக்கட்டணங்களை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும். அதேவேளை கப்பல்கள் குறித்த நாட்களில் வருகை தராமையால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தால் கப்பல் நிறுவனங்களிடமிருந்து சுமார் 5 - 6 இலட்சம் டொலர் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் இதுவரை ஒரேயொரு அதிகாரி மாத்திரமே சாட்சியமளித்துள்ளார். குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஏனைய எந்தவொரு நபரும் இதுவரை சாட்சியளிக்கவில்லை. அவர்களையும் தங்களிடமுள்ள ஆதரங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை எனில் அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கத்துக்காக முன்வைக்கப்பட்டவையாகவே கருதப்படும்.
எதிர்வரும் இரு மாதங்களுக்கான எரிபொருள் ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. விநியோகத்துக்கு சிக்கல் ஏற்படும் வகையில் முற்பதிவுகள் இரத்து செய்யப்படவில்லை. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் எரிபொருள் விலையில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நேரடியாக மின் கட்டணத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. தற்போது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய செப்டெம்பர் வரை மின் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த எதிர்பார்க்கவில்லை என்றார்.










.jpeg)

