2026இல் 2.5 இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலக்கு – வேலைவாய்ப்புப் பணியகம்



நடப்பு 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதை பிரதான இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைகளுக்கு மத்தியிலும், இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான நாடுகளைக் கண்டறிந்து, அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளுக்கு அவர்களை வழிநடத்தப் பணியகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்திப் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,873 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதேபோன்று தென் கொரியாவுக்கு 8,000 தொழிலாளர்களை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4,794 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக நடப்பு ஆண்டில் இதுவரை 1,43,087 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். 92,590 ஆண் தொழிலாளர்களும், 50,497 பெண் தொழிலாளர்களும் அடங்குவர். 73,623 பேர் திறன் சார்ந்த வேலைகளுக்காகவும், 69,494 பேர் திறனற்ற பணிகளுக்காகவும் சென்றுள்ளனர்.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் 4.6 பில்லியன் டொலர்களை நாட்டிற்குப் அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.