2026 முதல் அரையாண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் உயர்வு



2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
 
இதற்கமைய, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், பொருட்கள் மற்றும் சேவை ஆகிய இரு துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9,012.24 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8% வளர்ச்சியாகும்.

2026 இன் முதல் அரையாண்டில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 7,073.31 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.95% அதிகரிப்பாகும்.

இக்காலப்பகுதியில் சேவை ஏற்றுமதித் துறையும் 4.49% வளர்ச்சியைப் பதிவு செய்து 1,938.94 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது.

2026 ஜூன் மாதத்தில் மாத்திரம் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,658.62 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன் கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தை விட 12.53% வளர்ச்சியாகும்.

இதில் பொருட்கள் ஏற்றுமதி 1,314.10 மில்லியன் டொலர்களாகவும் (15.09% வளர்ச்சி), சேவை ஏற்றுமதி 344.52 மில்லியன் டொலர்களாகவும் (3.75% வளர்ச்சி) பதிவாகியுள்ளது.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிர்மாணம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் விநியோகம் போன்ற அறிவுசார் சேவைத் தொழில்கள், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைப் பல்வகைப்படுத்துவதற்கும் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க, உலகச் சந்தையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஏற்றுமதியாளர்கள் வெளிப்படுத்தும் போட்டித்தன்மையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.