
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய ஆய்வகங்களால் வசூலிக்கப்படும் சில வைததிய பரிசோதனைக் கட்டணங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 'முழு இரத்தப் பரிசோதனை' ஒன்றுக்காகத் தனியார் துறையினரால் வசூலிக்கப்படக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும்.
எனினும், யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்று குறித்த 'முழு இரத்தப் பரிசோதனை' பரிசோதனைக்காகத் தலா 550 ரூபா வீதம் அதிகக் கட்டணம் வசூலித்துள்ளமை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு 30 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இழைக்கப்பட்ட தவறு தொடர்பாகக் குறித்த நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே நாட்டின் பிரதான செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்றை பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் மேலதிக உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் அல்லது வைத்திய ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு பணத்திற்கும் சரியான சீட்டு அல்லது ரசீதைப் பெற்றுக் கொள்ளுமாறும், அது உங்களுடைய நுகர்வோர் உரிமை என்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் முக்கியமான சான்றாகவும் அதனைப் பயன்படுத்த முடியும் என்றும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விட அதிகமாகப் பணம் வசூலிக்கப்படும் சந்தர்ப்பங்கள் குறித்து அலுவலக நேரங்களில் '1977' என்ற குறுஞ்செய்தி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.









.jpg)



