
மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவின் செயற்பாடுகள் மந்தகரமாகவே காணப்படுகிறது. தேர்தலை நடத்த புதிய முறைமையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த தனிநபர் பிரேரணையை நிறைவேற்றினால் எவ்வித தடையுமில்லாமல் தேர்தலை நடத்தலாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவின் நடவடிக்கைகள் மந்தகரமாகவே காணப்படுகிறது. பழையத் தேர்தல் முறைமையின் கீழ் திருத்தங்களுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களமும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் யோசனை முன்வைத்துள்ள நிலையிலும் செயற்குழு அது குறித்து அவதானம் செலுத்தவில்லை.
தேர்தலை விரைவாக நடத்துவதற்கு சாதகமான வகையில் முன்வைக்கப்படும் யோசனைகளில் அரசாங்கம் குறைப்பாடுகளை மாத்திரமே ஆராய்கிறது.இதனால் இழுபறி நிலையே தொடர்கிறது.
தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு சாதகமான சூழல் ஒன்று தோற்றம் பெற்றால் அப்போது தேர்தல் குறித்த அரசாங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிடும் அதுவரையில் இந்த குழு முன்னேற்றகரமான வகையில் எந்த அறிவிப்புக்களையும் வெளியிடாது.
தேர்தலை நடத்த புதிய முறைமையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த தனிநபர் பிரேரணையை நிறைவேற்றினால் எவ்வித தடையுமில்லாமல் தேர்தலை நடத்தலாம். ஆனால் அரசாங்கம் அந்த தீர்மானத்தையும் எடுக்காது என்றார்.




.jpg)








