பிலியந்தலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: நடந்தது என்ன?


பிலியந்தலை, போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில், கூர்மையான ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரும் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொரலெஸ்கமுவ, ஓ.பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூர்மையான ஆயுதங்களுடன் வந்த நால்வர் தாக்குதல் நடத்தி, வீட்டிற்கும் சேதம் விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் பிலியந்தலை நோக்கி தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இரு சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, பின்னால் அமர்ந்திருந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் இடுப்புப் பகுதியில் காயமடைந்தார்.

காயமடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த வீட்டின் இளம் பெண் ஒருவரும் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.