.jpg)
டெங்கு நோயால் மரணித்தவர்களில் அதிகமானவர்கள் நோய் நிவாரணமாக நாட்டு மருந்துகளை பயன்படுத்திக்கொண்டு காலம் தாமதித்தே வைத்தியசாலைக்கு வந்தவர்களாகும். அதனால் காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் எம்.பி குறிப்பிடுகையில்,
கொழும்பு மாவட்டத்தி்ல் டெங்கு நோய் பாரியளவில் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் இனம் காணப்பட்டு வருகிறார்கள்.
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில், டெங்கு நோய் தொற்றிய சிறுவர்களால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் அளவு தாண்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கே அதிகம் காணப்படுகிறது. ஆனால் குப்பைகளை அகற்றும் பொறுப்பை உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் மந்தப்போக்கிலேயே மேற்காெண்டு வருகின்றன.
ஆனால் சுகாதார அதிகாரிகளும் பரிசோதனை அதிகாரிகளும் வீடுகளுக்கு சென்று டெங்கு சோதனை நடத்தி, மக்களுக்கு தண்டப்பணம் விதித்து வருகின்றனர்.
ஆனால் உள்ளூராட்சி மன்றங்கள் அவர்களின் பொறுப்பை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் யாருக்கும் பொறுப்பு கூறுவதும் இல்லை. அவர்களுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதும் இல்லை.
ஆனால் தற்போது அனைத்து விடயங்களையும் மக்கள் மீது சுமத்தி, அவர்கள் தப்பிக்கொள்ளும் நடவடிக்கையே இடம்பெற்று வருகிறது. கொழும்பு மாவட்டத்தில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறது. அதனால் இந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என கேட்கிறேன் என்றார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
மழையுடனான காலநிலை அதிகமாக உள்ள ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது கம்பஹா, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மக்களின் கூட்டு முயற்சியால், டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு ஓரளவு குறைந்துள்ளது.
குறிப்பாக கொழும்பு மாநகர எல்லைக்குள் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு குறைந்துள்ளது.ஒருவாரத்துக்கு முன்னர் கொழும்பு மாவட்டத்திலே அதிக டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டு வந்தரனர். தற்போது கம்பஹா மாவட்டத்தில் அந்த எச்சரிக்கை இருந்து வருகிறது.
நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) 19ஆயிரத்தி 43 இடங்களில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டதில் 445 இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் இனம் காணப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் இறுதியாகும்போது இந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதனால் இந்த எச்சரிக்கையில் இருந்து மக்கள் விலகி, இது தொடர்பில் கவனம் இல்லாத நிலைக்கு செல்லக்கூடாது என்பதாலே நாங்கள் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படும் எண்ணிக்கையை பகிரங்கப்படுத்தி வருகிறோம்.
அத்துடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள், அரச அதிகாரிகள் என அனைவரது ஒத்துழைப்புடனே மேற்கொண்டுவருகிறோம். அவர்களுக்கும் சில பிரச்சினைகள், குறைப்பாடுகள் இருக்கலாம்.
என்றாலும் டெங்கு நோய் தீவிரமாக பரவுவதை இந்தளவு கட்டுப்படுத்திக்கொள்ள இவர்களின் உதவியே காரணமாகும். டெங்கு நோயால் மரணிக்கும் வீதத்தை குறைப்பதே எமது நோக்கமாகும். 2017ஆம் ஆண்டு ஒரு லட்சி 87ஆயிரம் நோயாளர்கள் பதிவாகி,447 மரணங்கள் ஏற்பட்டன.
எனவே காய்ச்சல் நிலைமை ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் மரணித்த நோயாளர்களில் அதிகமானவர்கள் நோய் நிவாரணமாக நாட்டு மருத்துகளை பயன்படுத்திக்கொண்டு காலம் தாமதித்தே வைத்தியசாலைக்கு வந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார்.









.jpg)



