நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.


நீதிமன்ற வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால் நிலைகுலைந்துபோயுள்ள எதிர்க்கட்சியினர், நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவர முனையும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக நீதி அமைச்சிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னரே அது குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்படும். அண்மைய நாட்களாக நாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர்கள் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன், நீண்டகாலமாகத் தேங்கிக் கிடக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில், சட்ட அமுலாக்கத்தையும் நீதித்துறை நடவடிக்கைகளையும் முடக்கும் நோக்கிலும், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலுமே எதிர்க்கட்சியினர் நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை பலம் உள்ளதால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் மிக எளிதாகத் தோற்கடிக்கும்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கை புதியதொன்றல்ல. இது தொடர்பில் பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் தரப்பில் நீண்டகாலமாக யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவந்து, மக்களுக்குத் திறம்பட நீதியைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். இதற்காகப் புதிய நீதிபதிகளை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வரும் அதேவேளை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் முதல் பிரதம நீதியரசர் வரையிலான அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நீதி அமைச்சிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிட்ட பின்னரே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட ஏனைய தரப்புகளுடன் இது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும்.

ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் மற்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு திருத்தத்திற்கும் எமது கட்சி எப்போதும் ஆதரவளித்தே வந்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. மக்களின் ஆணையையும் பாராளுமன்றத்தின் பங்களிப்பையும் பெற்று, உரிய காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படும் என்றார்.