.jpg)
( பாறுக் ஷிஹான் )
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை தனது கைத்தொலைபேசியில் வீடியோ பதிவு செய்ததாகக் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இளைஞரை, கல்முனை நீதிவான் நீதிமன்றம் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (19), கல்முனை புறநகர் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இரு தரப்பினரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், சமரசமாகச் செல்ல இணக்கம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா, அவர்களை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரியின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இரு தரப்பினரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இரு தரப்பினரையும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி கைது செய்து, பொலிஸ் நிலையத்திலுள்ள இரு தனித்தனி சிறைக்கூடுகளில் அடைத்துள்ளார்.
இதன் பின்னர், பொலிஸ் நிலையத்தில் இருந்த 24 வயதுடைய இளைஞர், சிறைக்கூடத்தில் இருந்த சந்தேகநபர்களை தனது கைத்தொலைபேசியில் வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவதானித்த பொலிஸார், அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபரை சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வீடியோ பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கைத்தொலைபேசியை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் மேலதிக விசாரணைகளை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.











.jpg)

