எரிபொருள் வரியால் மக்களைச் சுரண்டி நிதி வெற்றி என அரசாங்கம் பெருமை பேசுகிறது – சம்பிக்க ரணவக்க


அரசாங்கம் தனது இயலாமையை மறைத்து, மக்களின் வயிற்றில் அடித்து, எரிபொருள் மீதான வரியின் மூலம் இலாபம் ஈட்டி, அதை நிதி வெற்றி என்று பெருமை அடிக்கிறது. இது நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு விடுக்கப்பட்ட பெரும் அநீதியாகும். அத்துடன் மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல் அரசாங்கம் அதைக் குறைத்து வருவதாலே வரவு செலவு திட்டத்தில் உபரி ஏற்பட காரணமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி திங்கட்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை நிலவிய நாட்டில், முதல் ஐந்து மாதங்களில் 197 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்ட உபரி ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு பாரிய நிதி வெற்றி என்றும் அரசாங்கமும் நிதித்துறையில் உள்ளவர்களும் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

1954ஆம் ஆண்டிலிருந்து எமது நாட்டில் நிலவி வரும் இந்தப் பற்றாக்குறை பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும் என்பது உண்மையாகும். இருப்பினும், வெறும் ஐந்து மாதங்களின் தரவுகளை வைத்து இந்த வருடத்தின் முழுமையான நிதி நிலையை தீர்மானிக்க முடியாது.

2025 ஜனவரி முதல் மே மாதம் வரை மற்றும் 2026 ஜனவரி முதல் மே மாதம் ஆகிய காலப்பகுதிகளை நாங்கள் ஒப்பிடும்போது, வரி வருமானம் 1,802 பில்லியனிலிருந்து 2,323 பில்லியன் வரை 521 பில்லியன் ரூபாவா அதிகரித்துள்ளது. இது 30 வீத வருமான அதிகரிப்பாகும். ஆனால், இந்த வருமானம் எவ்வாறு கிடைத்தது என்பதை நாம் ஆராய வேண்டும்.

அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு என்னவென்றால், மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல் அரசாங்கம் அதைக் குறைத்து வைத்திருக்கிறது என்பதாகும்.

கடந்த ஆண்டு, ஒரு டிரில்லியன் ரூபா பெறுமதியான மூலதனத் திட்டங்கள் முடங்கிக் கிடந்தன.அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டிருந்தார். அவற்றைப் பராமரிக்க 20 பில்லியன் ரூபா செலவானது. இந்த ஆண்டும் அதே நிலைதான்.

இந்த வருடத்திற்கு மூலதனச் செலவுகளுக்காக 1,713 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு 143 பில்லியன் வீதம், ஐந்து மாதங்களில் 716 பில்லியன் செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 226 பில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 13 வீதமாகும்.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், நீர்ப்பாசனம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகள் முடங்கியுள்ளதாலேயே இந்த 197 பில்லியன் உபரி கிடைத்துள்ளது. இந்த அபிவிருத்திப் பணிகளை முறையாகச் செய்திருந்தால், வரவு செலவுத் திட்டத்தில் 297 பில்லியன் ரூபா பற்றாக்குறைதான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் நாட்டில் ஒரு டிரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரிகளை செலுத்தாமல் இருக்கும் 4,200 பேர் இருக்கிறார்கள். அவர்களிடிருந்து அரசாங்கம் வரிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்க, இந்த வரி வருமானம் அரசாங்கத்துககு எங்கிருந்து வருகிறது? இது பிரதானமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பின் மூலமே கிடைக்கிறது.

அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது எரிபொருள் விலை குறித்து இவ்வாறு கூறினார் அதாவது, எரிபொருளைக் கொள்வனவு செய்து, கப்பல் செலவு, காப்புறுதி, வரி என அனைத்தும் சேர்த்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோல் 85 ரூபாவாக இருக்கும்.

ஆனால், அரசாங்கம் அதன் மீது மேலும் 70 ரூபா வரியைச் சேர்த்து, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும்போது அதன் விலையை 135 ரூபாவாக உயர்த்துகிறது.

இது தவிர, எண்ணெய் கூட்டுத்தாபனம் மேலதிகமாக 50 ரூபா லாபம் சம்பாதிக்கிறது. ஒரு லீட்டர் பெட்ரோல் மூலம் அரசாங்கம் 60 ரூபாவுக்கு மேல் சுரண்டுகிறது என்று அவர் அன்று குறிப்பிட்டார்.

அவரது அன்றைய வாதத்தின்படி பார்த்தால், இன்று நிலைமை என்ன? ஜூலை 12ஆம் திகதி வரையிலான சிங்கப்பூர் பிளாட்ஸ் குறியீட்டின்படி ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை சுமார் 204 ரூபாவாகும்.

ஆனால், அரசாங்கம் அதை 414 ரூபாவுக்கு விற்கிறது. இன்று சிங்கப்பூர் சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை சுமார் 225 ரூபாவாகும். அப்படியென்றால், இன்று யார் திருடுகிறார்கள், யார் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசாங்கம் தனது இயலாமையை மறைத்து, மக்களின் வயிற்றில் அடித்து, எரிபொருள் மீதான வரியின் மூலம் இலாபம் ஈட்டி, அதை நிதி வெற்றி என்று பெருமை அடிக்கிறது. இது நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு விடுக்கப்பட்ட பெரும் அநீதியாகும் என்றார்.