
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 55,000 மெற்றிக் தொன் உரத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் உடனடியாகச் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த கூட்டு எதிர்கட்சி புதன்கிழமை (22) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆட்சிக் காலத்தில், நான் விவசாயத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, ரஷ்யாவின் மூலம் இலங்கைக்கு 55,000 மெற்றிக் தொன் உரம் இலவசமாகக் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டன. அந்த உரத்தை நாட்டின் நெல் விவசாயிகளுக்கு இரு முறைகளும், காய்கறி விவசாயிகளுக்கு ஒரு முறையும் எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கவே நாம் திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், அந்த உர நிவாரணத்தில் பாதியைக் கூட விவசாயிகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல், எஞ்சிய பெருமளவிலான உரக் கையிருப்புக்கு என்ன நடந்தது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அவை பல இடங்களில் சட்டவிரோதமாகப் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை அரசாங்கத்தின் குற்றப்புலனாய்வுத் துறையோ அல்லது பொலிஸாரோ கண்டுபிடிக்கவில்லை. மாறாகத் தனியார் ஊடகங்களே அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளைப் பாதுகாக்க முனைவதையும், கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் கைது செய்து வழக்கைக் திசைதிருப்ப முயல்வதையும் அரசாங்கம் கைவிட வேண்டும். காணாமல் போயுள்ள உரக் கையிருப்பு குறித்துச் சுயாதீனமான மற்றும் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, அதனுடன் தொடர்புடைய நபர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நெல் விவசாயிகளுக்கு இரு முறைகளும், காய்கறி விவசாயிகளுக்கு ஒரு முறையும் முற்றிலும் இலவசமாக வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த உரக் கையிருப்புக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
அத்துடன், எதிர்க்கட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும், உர நிவாரணங்கள் குறித்த உறுதிமொழிகளையும் காப்பாற்றத் தவறிவிட்ட சூழ்நிலையில், இந்த உரப் பிரச்சினையில் என்ன நடந்தது என்ற உண்மைத்தன்மையை அரசாங்கம் உடனடியாக வெளிக்கொணர வேண்டும் என்றார்.









.jpg)



