கடல் நடுவே திடீரென நோயுற்ற மீனவர் மீட்பு - கடற்படை மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நோயுற்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகின் மீனவர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) ஒருங்கிணைப்பில் கடற்படையினரால் விரைந்து கரைக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
திக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 15ஆம் திகதி 06 மீனவர்களுடன் புறப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு, இலங்கைக்குத் தெற்கே சுமார் 244 கடல் மைல் (Nautical Miles) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த மீனவர் திடீரென நோயுற்றுள்ளார்.
அவருக்கு அவசரச் சிகிச்சை வழங்குவதற்காக கரைக்குக் கொண்டுவரக் கடற்படையின் உதவியை நாடுமாறு, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதற்கமைய, குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ‘CMA CGM BAHIA’ எனும் சர்வதேச வர்த்தகக் கப்பலுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மீனவர் பாதுகாப்பாக அக்கப்பலுக்குள் ஏற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவரை விரைவாகக் கரைக்கு அழைத்து வர மேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட கடற்படைக் கப்பல் ஒன்று குறித்த வர்த்தகக் கப்பலை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.
கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்ட மீனவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டதுடன், விரைவாகக் கொழும்பு துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்துக்குள் இடர்ப்பாட்டில் சிக்கும் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்குத் தேவையான அவசர நிவாரணங்களை வழங்குவதற்காகக் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளதாகக் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.










.jpg)



