சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2011

இங்கே உங்களது ராசியை தெரிவுசெய்து அதன் மேல் (அழுத்தி )கிளிக் செய்து வாசியுங்கள்
  1. மேஷம்
  2. ரிஷபம்
  3. மிதுனம்
  4. கடகம்
  5. சிம்மம்
  6. கன்னி -
  7. துலாம்
  8. விருச்சிகம்
  9. தனுசு
  10. மகரம்
  11. கும்பம்
  12. மீனம்


திருக்கணித பஞ்சாங்கப்படி இந்தக் கர ஆண்டு, ஐப்பசி மாதம், 29ஆம் தேதி (15.11.2011), செவ்வாய்க் கிழமை, காலை 10.10 மணிக்கு கால புருடனின் ருண, ரோக, சத்ரு ஸ்தான ராசியான கன்னி ராசியிலிருந்து, களத்ர, நட்பு ராசியான, ஏழாம் ராசியான துலாம் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இங்கு 15.5.2012 வரை சஞ்சரித்துவிட்டு, 16.5.2012 அன்று காலை 6.46 மணிக்கு வக்கிர கதியில் மறுபடியும் கன்னி ராசிக்குச் செல்கிறார். அங்கு சுமார் 80 நாட்கள் சஞ்சரித்துவிட்டு 4.8.2012 அன்று காலை 8.40 மணிக்கு மறுபடியும் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்குப் பிறகு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு 2.11.2014 அன்று இரவு 8.52 மணிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் சுமார் 21 மாதங்கள் சனி பகவான் குரு பகவானின் அருட் பார்வையைப் பெற்றும் சஞ்சரிக்கிறார். மேலும் துலாம் ராசி, சனி பகவானுக்கு உச்ச வீடாகும். தன் உச்ச ராசியில் மகிழ்ச்சியுடன் சஞ்சரிக்கும் சனி பகவான் அனைவருக்கும் பெரும்பாலும் நன்மையே செய்வார். குறிப்பாக ரிஷபம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் அதி உன்னதமான பலன்களை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



ஏழரை நாட்டு சனி பகவான்!

சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரின் ராசியிலிருந்து பன்னிரண்டாம் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது சிரசு சனி என்றும், ராசியில் அதாவது 1ஆம் வீட்டில் சஞ்சரிக்கும்போது ஜென்ம சனி என்றும், இரண்டாம் ராசியில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் பெயர். இந்த நிலை முப்பது வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும். முதல் சுற்று அதாவது சந்திர பகவானை சனி பகவான் கடந்து செல்வது சங்கடங்களையும் இடர்களையும் தரும். இந்த ஏழரை ஆண்டு காலத்தை மங்கு சனி என்பர். இரண்டாவது சுற்று பொங்கும் சனி என்பதாகும். இதில் கடினமான பலன்கள் குறைந்து புதிய முன்னேற்றத்திற்கு அடித்தளம் ஏற்படும். மூன்றாவது சுற்று மரண சனி எனப்படும். இந்தக் காலகட்டத்தில் சில கண்டங்கள் ஏற்பட்டு விலகும். பொதுவாக ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி தங்கத்தை சுத்தியால் அடித்துதான் ஆபரணமாக ஆக்குகிறார்களோ, அதேபோன்று நம்மை கஷ்டங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் மாற்றுகிறார் என்றால் மிகையாகாது.

இதேபோன்று ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்தாஷ்டம சனி என்றும், ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனி என்றும் பெயர்.

""அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி'' என்கிற வழக்கு உள்ளது. இந்தக் காலகட்டங்களிலும் ஏழரை நாட்டுச் சனி போன்று வாழ்க்கையில் சோதனைகளை உண்டாக்கி திருப்பங்களைத் தருகிறார். இந்த சஞ்சார காலங்களில் சனி பகவானுடன் குரு பகவான் இணைந்திருந்தாலோ அல்லது சனி பகவானை குரு பகவான் பார்வை செய்தாலோ அதி உன்னதமான பலன்கள் உண்டாகின்றன. மேலும் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்ப லக்னக்காரர்களுக்கும், ஜனன காலத்தில் சனி பகவான் ஆட்சி உச்சம் மூலத் திரிகோணம் பெற்று இருப்பவர்களுக்கும், சனி பகவான் 3,6,11 ஆம் ராசிகளில் இருப்பவர்களுக்கும் மேலே சொல்லப்பட்ட கெடு பலன்கள் பெருமளவுக்குக் குறைந்தும் அல்லது இல்லாமலும் இருக்கும்.

கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை!

சனி பகவான் அனுகூலமற்ற ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் ராசிக்காரர்களுக்கு எண்ணற்ற துன்பங்களையும், தடைகளையும், இடையூறுகளையும், உடல் ஆரோக்யக் குறைவையும், மன உளைச்சலையும் தருவார். அதே சனி பகவான் அந்த அனுகூலமற்ற ராசியை விட்டுப் பெயர்ச்சியாகும் காலத்தில் துன்பம் கொடுத்த ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகளைக் கொடுப்பார். இதனால்தான் ""சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை'' என்கிற பழமொழி ஏற்பட்டது. இனி பலன்களைப் பார்க்கலாம்.

சச யோகம்: இது சனி பகவானால் ஏற்படும் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றாகும். சனி பகவான் துலாமிலோ, மகரத்திலோ அல்லது கும்பத்திலோ அமர்ந்து, அந்த இடமானது லக்னத்திலிருந்தோ அல்லது சந்திரபகவான் இருக்குமிடமான ராசிக்கோ கேந்திரஸ்தானங்களாக (அதாவது 1,4,7,10ஆம் இடங்கள்) அமையுமானால் உன்னதமான பலன்களை அளிக்கின்ற சச யோகத்திற்கு ஜாதகர் உரியவராவார். இந்த யோகத்தினால் எல்லா தரப்பட்ட மக்களாலும் போற்றப்படுபவராக இருப்பார். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். அரசியல் துறையில் உயர் பதவிகள் கிடைக்கும்.

சனி மேடு: உள்ளங்கையில் சனி மேடு(சனி விரலான நடு விரலுக்கு கீழ் உள்ள பகுதி) பெரிதாக, நேர்கோடுகள் நன்றாக அமைந்திருந்தால் சிறப்பு. இதனால் கடமையுணர்ச்சி, திட சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவை வளரும்.

சனி பகவானின் குணம்: சனி பகவான் கர்மகாரகர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் சுய ஆதிக்கம் பெற்றவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். எந்த அளவிற்குப் பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும். உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடலாம். அதனால் பெயரும், புகழும் உயரும். வேதாந்த ஞானம் உண்டாகும். இரக்க சுபாவம் அதிகரிக்கும். மேலும் சனிபகவான் கஷ்டங்களைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பார். இவர் செவ்வாய்,ராகு, கேது பகவான்களால் பாதிக்கப்படாதவரை மாறாத தன்னிலை உள்ளவர்.

சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் பஞ்ச பூத தத்துவங்களில் வாயு தத்துவத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள். பெருக்கவும், இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள் இவர்கள். சாதாரண விஷயத்திற்குக்கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பார்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள். அதேநேரம் மந்தனாகிய சனி பகவானின் நல்லதோர் ஆதிக்கத்தைக் கொண்ட ஜாதகருக்கு, யோகம் தாமதித்தே ஏற்படும்.

நீடித்த ஆயுள்:

லக்னத்தில் சனி பகவான் இருந்தாலும், லக்னத்தை சனி பகவான் பார்வை செய்தாலும், எட்டாமிடத்தில் சனி பகவான் இருந்தாலும் அந்த எட்டாமிடத்தைச் சனிபகவான் பார்வை செய்தாலும் நீடித்த ஆயுள் ஏற்படும். மேலும் சனி பகவானுடன் குரு பகவான் இணைந்திருந்தாலோ அல்லது குரு பகவானின் பார்வையைப் பெற்றாலோ, சனி பகவான் 3,6,10,11 ஆகிய உப ஜெய ஸ்தானங்களில் (உப ஜெயம் என்றால் வெற்றிக்குத் துணை நிற்பது என்று பொருள். உப ஜெய ஸ்தானங்களிலிருந்து வழக்கில் வெற்றி, கடன் அடைபடுதல், நோய் குணமடைதல், தொழிலில் பன் மடங்கு லாபம், நிலையான சொந்தத் தொழில், வாகன யோகம் போன்றவை குறித்து அறியலாம்) இருந்தாலோ, சனி பகவான் ஆட்சி(மகர ராசி) உச்சம்(துலாம் ராசி) மூலத் திரிகோணம் (கும்ப ராசி) ஆகிய ராசிகளில் இருந்தாலோ, சுபர் சாரம் பெற்றிருந்தாலோ நீடித்த ஆயுள் உண்டாகும்.

குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?

குரு பகவானின் தசைக்குப் பிறகே சனி பகவானின் தசை வரும். குரு மஹா தசையில் பெரிய யோகங்கள் உண்டாகாது. அந்த குரு மஹா தசையில் ஜாதகருக்கு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற ஆற்றலும், திறமையும் உண்டாகி, பெரியோர்கள் மற்றும் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் தொடர்பும் ஏற்படும். அதேநேரம் அவர்களுக்கு குரு மஹா தசைக்குப் பிறகு தொடரும் சனி மஹாதசையில் செல்வாக்குடன் செல்வம், பொன், பொருள் அமையும். அசையாச் சொத்துக்களும் மிக உயர்ந்த பதவிகளும் கிடைக்கும்.

பித்ரு தோஷம்:

ஜாதகங்களில் சனி பகவானுடன் சூரிய பகவான் இணைந்தோ, பார்க்கப்பட்டிருந்தாலோ, சூரிய பகவானுடன் சர்பக் கிரகங்களான ராகு, கேது பகவான்கள் இணைந்திருந்தாலோ பித்ரு தோஷம் உள்ளது என்று கொள்ள வேண்டும். இதற்கு இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று உத்திராயண புண்ணிய காலத்தில் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) தில ஹோமம் செய்து விட்டு வர வேண்டும். இதற்குப் பிறகு சனிக் கிழமைகளில் சனி பகவானையும், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட பித்ரு தோஷம் மறையத் தொடங்கும். மேலும் ""பிரேத சம்ஸ்காரம்'' என்ற இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது எரிப்பதற்கோ உதவுவது மிகவும் உயர்ந்த சனிப்பிரீதியாகும். குறிப்பாக அனாதைப் பிணங்களை எரிக்க உடலாலோ, பணத்தாலோ உதவி செய்பவர்கள் சனி பகவானின் கருணைக்குப் பாத்திரமாவார்கள்.

சனி பகவானின் வழிபாட்டுத் தலங்கள்:

சனி பகவானுக்கு உரிய வழிபாட்டுத் தலங்கள் பல இருந்தாலும் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது திருநள்ளாறு தலம். அடுத்ததாக தேனி மாவட்டத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குச்சனூர் சனி பகவான். ஓமாம்புலியூர் சனிபகவான் (ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருக்கொள்ளிக்காடு சனி பகவான் (திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருவானைக்காவல் சனி பகவான் (சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), சோழவந்தான் சனி பகவான் (விசாக நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருப்பரங்குன்றம் சனி பகவான் (ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருச்செங்கோடு சனி பகவான் (சதய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), கொடுமுடி சனிபகவான் (அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது) ஆகியவையும் சனி பகவானின் அருளைத் தரும் தலங்கள் ஆகும். மேற்குறிப்பிட்ட தலங்களில் ஒன்றுக்காவது சென்று வழிபடுவது நலம் பயக்கும்.

விழுப்பு ஆடையை அணியக் கூடாது:

விழுப்பு ஆடை என்பது முதல் நாள் படுக்கையில் அணிந்திருந்தது. அதை மறுநாள் துவைக்கப் போட்டுவிட வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விழுப்பு ஆடைகளை சனிபகவானின் பிடியில் இருப்பவர்கள் அதாவது ஏழரை நாட்டுச் சனி, அர்தாஷ்டம சனி, மற்றும் அஷ்டம சனி ஆகியவை நடப்பவர்கள் மறுநாளும் அணிந்துகொண்டால் சனி தோஷம் இன்னும் பலமாகும். அதோடு சனியின் பிடியில் இல்லாதவர்களும் விழுப்பு ஆடைகளை அணியக்கூடாது. ""விழுப்பு இருக்குமிடத்தில் வில்வப் பழக்காரி வரமாட்டாள்'' என்பது மூதோர் வாக்கு. வில்வப் பழக்காரி என்பது திருமகளைக் குறிக்கும்.

வாழ்க்கையில் செல்வத்தை இழந்து கஷ்டப்படுபவர்கள் பொருளாதார வளம் சிறக்க 12 வெள்ளிக் கிழமைகளில் மாலை வேளையில் மஹாலட்சுமியை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும். சென்னை, மயிலையில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வெள்ளிக் கிழமைகளில் மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அன்பர்களின் நலனுக்காக அர்ச்சனை செய்யப்படுகிறது.

சனி பகவானுக்கு உகந்த பரிகாரம்:

சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை தலை, கை, கால் மூட்டுகள், தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி, சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும். இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல் மற்ற கிரகங்களின் தாக்கமும் குறையும். சனி பகவான் ஆயுள்காரகர் என்பதால் அத்தகையவர்கள் வழுக்கி விழுந்தாலும் இடுப்பில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படாது. ஏழரை சனிக் காலத்தில் கவனக் குறைவால் மறைமுகமாக ஏற்படும் அபாயங்களையும் சமாளிக்க முடியும். "சனியனே, முண்டமே' என்று திட்டாமல் இருப்பது அவசியம். இது சனீஸ்வரரை கேவலப்படுத்துவதாகும். மேலும் சனிக் கிழமைகளில் எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், விதவைகளுக்கும், முடவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவி வர வேண்டும். நள புராணத்தைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம். சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும் சனிபகவான் கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.

சிவபெருமானிடம் சனி பகவானுக்கு பக்தி அதிகம். சனி பகவான், பஞ்சாட்சரமான, ஐந்தெழுத்து மந்திரமான "நமசிவாய' என்கிற மந்திரத்தை ஜெபம் செய்கின்றவர் என மந்திர சாத்திரங்கள் பேசுகின்றன. வைணவர்கள் சுதர்சன அஷ்டகம், ஆஞ்சநேய கவசம் படிக்க வேண்டும். குங்குலியப் புகையின் நடுவில் இருந்து கொண்டு ஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிகர் அருளிய சுதர்சன அஷ்டகத்தைப் படித்தால் சனி தோஷம் விலகும்.

சனி பிரதோஷம்:

சிவபெருமான் விஷம் அருந்திய நாள் சனிக்கிழமை. அவர் ஆனந்தத் தாண்டவமாடிய திதி திரயோதசி திதி. இந்த இரண்டும் சேர்ந்து வருவதுதான் சனிமஹா பிரதோஷம். ஒரு சனிப்பிரதோஷ தரிசனம் செய்தால் ஐந்து வருடங்களுக்கு சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும். அடுத்தடுத்து இரண்டு சனிப் பிரதோஷங்களை அனுசரிப்பது அர்த்தநாரி பிரதோஷம் என்று புகழப்படுகிறது. இதற்குப் பலன் பிரிந்த தம்பதிகள் கூடுவார்கள். மேலும் திருமணத் தடையும் விலகும். தவறவிட்ட செல்வம் மீண்டும் கை வந்து சேரும்.

சனிக் கிழமைக்கு வட மொழியில் ஸ்திரவாரம் என்று பெயர். (ஸ்திரம் என்றால் அசையாதது, நிரந்தரம், பலமாக ஊன்றி நிற்பது என்று பொருள்). அதனால்தான் சனி பகவான் வலுப்பெற்று அவர் தசையில் வாங்கும் வீடு, நிலம் ஆகிய சொத்துக்கள் நிரந்தரமாகத் தங்கி வம்சத்தினருக்கும் செல்லும். மேலும் சனி தசையில் வாங்கிய சொத்துக்களை அவ்வளவு எளிதில் சுலபமாக விற்க முடியாது.

ஐஸ்வர்யம் தங்கும்:

வீட்டில் குப்பைத் தொட்டி வைத்திருக்கும் இடத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். வீட்டைப் பெருக்கும்போது குப்பைகளை தென்மேற்கு மூலையில் குவித்து, அங்கிருந்து அள்ளி வெளியில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் இல்லத்தில் ஐஸ்வர்யம் தங்கும்.

சனியின் ஆதிக்கம்:

ஒருவர் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றால் அவர் வாழ்க்கையில் செவ்வாய் தசை வர முடியாது. அதேபோல் அனைத்து தசைகளில் பிறந்தால் ஒரு குறிப்பிட்ட தசை வாழ்க்கையில் வராமல் போய்விடும். இதே அடிப்படையில் கேட்டை, ஆயில்யம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தாலும் சனி பகவானின் ஆதிக்கம் ஏற்படாது என்று கூற முடியாது. ஏனெனில் அனைவரையும் ஏழரை சனி, அர்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம சனி ஆகிய முறையில் ஆதிக்கம் செலுத்துகிறார். இதனால் சனி மஹா தசை வராவிட்டாலும் மேற்கூறியபடி வந்து ஆட்டிப் படைப்பதில் அவருக்கு நிகர் அவரே. புழு, பூச்சி, விலங்கு, மனிதர், தேவர் ஆகிய அனைவரும் சனி பகவானின் ஆளுகைக்கு உட்பட்டவர்களே என்றால் மிகையில்லை.

நெருப்புக்குப் போக வேண்டும்:

""பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்'' என்று கூறியுள்ளார்கள். அதாவது பருப்பு என்றால் திருமணத்தில் பரிமாறப்படும் விருந்தைக் குறிக்கும். ""பருப்பில்லாமல் கல்யாணமா?'' என்றும் கூறுவார்கள். திருமணத்தைவிட ஒருவரின் சாவுக்குச் செல்வது, பிணத்திற்குக் கடைசி மரியாதை செலுத்துவது முக்கியம். அங்கு சென்றால் ஏதாவது சிறு உதவியாவது செய்ய வாய்ப்பு ஏற்பட்டு சனி பகவானின் அருளினால் நம் பாவங்கள் குறையும்.

சனி பகவான் சில துளிகள்

பெற்றோர்: சூரிய பகவான்/சாயாதேவி

மனைவி-நீலாதேவி

மகன்-குளிகன்

திசை-மேற்கு

ரத்தினம்:

நீலம் (இந்திர நீலம்/ அபராஜிதா நீலம்)

தானியம் -எள்

சமித்து-வன்னி

வாகனம் - காகம்

பெரிய தாய் - உஷா தேவி

பெரிய தாயின் பிள்ளைகள் -வைவச்வதமனு, எமன்,யமுனை

உடன் பிறந்தோர் - சாவர்ணிமனு, தபதி என்கிற பத்தினி

தேர்- இரும்பால் ஆனது. அதில் நீல ஆடை அணிந்த

எட்டு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும்.

கைரேகைகளில் - விதி ரேகை/நடுவிரல்

காரகத்துவம்- ஆயுள்

பார்வை - 3,7,10

வடிவம் - குள்ளம்

சம கிரகம்- குருபகவான் அதிதேவதை/

பிரத்யதி தேவதை - யமன்/பிரஜாபதி

உபகிரகங்கள் - ஒன்பது

குணம் - குரூரம், மந்தநடை

நட்பு கிரகங்கள் -

புதன், சுக்கிரன், ராகு,

கேது பகவான்கள்

பகை கிரகங்கள்-

சூரியன், சந்திரன்,

செவ்வாய் பகவான்கள்

நிறம் - கருப்பு

சனி பகவான் காயத்ரி!

""காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி

தந்னோ மந்தப்ரசோ தயாத்''
--
-->